Tuesday, 27 December 2011

Love is Right [or] Not.

காதல் சரியா? தவறா?

காதல் என்றால் என்ன? காதல் சரியா தவறா? காதலிப்பது சரியா தவறா? என்பன என்றைக்கும் புதிதாகத் தெரிகிற பழைய கேள்விகளே.


‘இப்படிப்பட்டதுதான் காதல்’ என்று யாராலும் கட்டம் கட்டி இலக்கணம் சொல்லி விட முடியாது என்பதுதான் காதலின் சிறப்பம்சம். காதல், சிலருக்கு அமிர்தம். சிலருக்கு விஷம்! சிலருக்கு அது புனிதம், நம்பிக்கை, ஏகாந்தம். வேறு சிலருக்கோ அது... புதிர், ஏமாற்றம், பயம், இவ்வாறு காதல் எல்லோரிடத்திலும் ஒவ்வொருவிதமான உருவெடுத்துக்கொள்ளும்.

ஏன், இப்படி காதலின் முகம் ஆளாளுக்கு மாறுபடுகிறது? அதை அமிர்தமாகவோ, விஷமாகவோ மாற்றுவது எது? நம்பிக்கையான காதலின் நிறம் என்ன? ஏமாற்றம் தரும் காதலின் உருவம் என்ன? என்பதும் கேள்விக்குறியே. ஆனாலும் அது ஒவ்வொருவரது மனநிலையைப் பொறுத்து உருவெடுத்து அமைகிறது என்பது சிலரது கருத்து.

காதல் என்பதே ஒரு வகையில் திட்டமிடுதல்தான். ‘எனக்கு எப்படியும் யாராவது ஒருவன் கணவனாக வரப் போகிறான். என்னை ஓரளவுக்குப் புரிந்து கொண்டிருக்கிற, எனக்காக இவ்வளவு செய்யும் நீயே, என்னில் இவ்வளவு அக்கறை கொள்ளும் நீயே, எனக்காகவே வாழும் நீயே அந்த ஒருவனாக இருந்தால் நல்லதுதானே’ என்று மனம் போடும் கணக்கு, காதலின் முக்கியக் கூறு!  இது ஆண்களுக்கும் பொருந்தும்.


அவன் எவ்வளவு சம்பாதிக்கிறான், என்ன வாகனம் வைத்திருக்கிறான், அவன் வீட்டில் எத்தனை பேர் என்பதையெல்லாம் சேர்த்து அந்தக் கணக்கைப் போடுவதில் எந்தத் தவறும் இல்லை. ‘பிரதிபலன் பார்க்காமல் வருவதுதான் உண்மையான காதல். கணக்குப் பார்ப்பது காதலுக்கே களங்கம்’ என்றெல்லாம் இளைஞர்களிடம் பரவலாக இருக்கும் உணர்ச்சிவசப்பட்ட வாக்கியங்கள்தான்.

கல்லூரிப் பருவம் என்றதுமே கூடவே வந்து விடுகிறது, காதல்! இனக்கவர்ச்சி ஆபத்தில் சிக்கி பலரும் திசைமாறிப் போய்விட, காதலை ஆக்கப்பூர்வமான ஒரு சக்தியாக பயன்படுத்தி வாழ்க்கையில் ஜெயித்த காதலர்களும் இருக்கின்றார்கள்,
நம் தமிழ்க் கலாச்சாரத்தில் பெண் என்றாலே அவள் தனக்குப் பிடித்தக் காதலைக் கூட முதலில் மறுத்து, பிறகுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற செயற்கையான லாஜிக் இருப்பதால், ‘மனம் துணிந்து காதலைச் சொன்னால் அது வெற்றியாக முடிந்தே ஆக வேண்டும்’ என்ற உளவியல் அழுத்தம் பெண்கள் மத்தியில் தோன்றிவிடுகிறது. 

‘காதலைப் பொறுத்தவரை பெண்தான் தேர்ந்தெடுப்பவளாக இருக்கவேண்டும். ஆண் என்பவன் அவள் முடிவுக்கு அடிபணிபவனாக இருக்க வேண்டும்’ என்ற எதிர்பார்ப்பே, ஆணாதிக்கம் போன்ற ஒருவித ஆதிக்க உணர்வுதான். பணிவது, பணியவைப்பது என்பதையெல்லாம் தாண்டிய பரஸ்பர அன்புதானே காதல்? 

ஒரு பெண்ணுக்கு பிடித்தவன், பிடிக்காதவன் என்று இருப்பதுபோல ஆணுக்கும் இருக்கும்தானே? தன்னிடம் காதல் சொல்லும் பெண்ணையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அவனைக் காதலன் என்று சொல்வதா... இல்லை, பெண்பித்தன் என்று சொல்வதா? 


சிலர் நினைக்கலாம். ஆணும் பெண்ணும் சகஜமாக பழகுவது என்பது தவறே இல்லை. அதைக் கூடாது என்று கண்டிப்பது பிற்போக்குத்தனம்தான். ஆனால், எதற்குமே ஒரு எல்லை இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.  பெண்களே நீங்கள் ஒரு ஆணோடு களங்கமில்லாமல் பழகுவதுபோலவே அவனும் உங்களோடு பழகுவான் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? தோளில் கை போட்டுக் கொண்டு வலம் வருவது உங்களைப் பொறுத்தவரை நட்பாக இருக்கலாம். ஆனால், நம் சமூகம் இன்று வரை கல்யாணம் செய்து கொள்வதையே ‘கரம் பிடிப்பது’ என்று சொல்கிறது. உங்கள் மனதில் களங்கமில்லை, விரசமில்லை, தடுமாற்றம் இல்லை! ஆனால், நீங்கள் மட்டுமே உலகமில்லை என்பதை மனதில் ஆணி அடித்தாற்போல எப்போதும் நினைத்திருக்கவேண்டும்! 

பெண்களே ‘நான் நல்லவளாக இருக்கும்போது, யார் என்னை என்ன செய்துவிட முடியும்?’ என்று கேட்பதை தைரியம் என்று சொல்வதைவிட அசட்டு தைரியம் என்று சொல்வதுதான் சரி. உங்களுடைய பாதுகாப்பு உங்களைப் பொறுத்தது மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கிற ஆண்களின் ஒழுக்கமும் அதில் பங்கு வகிக்கிறது. 

நாம் கனவு காண்பது போன்ற, ஆண் &பெண் பேதமில்லாத கலாசாரம் வெளிநாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அவர்களைப் பொறுத்தவரையில் கற்பு என்பதோ, கல்யாணம் என்பதோ, பாலியல் தவறுகள் என்பதோ பெரிய விஷயமில்லை. இரண்டு கல்யாணம், மூன்று குழந்தைகள் என்று இருக்கும் பெண்களையும் வெளிநாட்டில் ஒரு ஆண் காதலிப்பான். அதேபோல பெண்களும் காதலிப்பார்கள்.


இன்னொரு விடயம் காதலில் பொய் முக்கிய இடத்தை வகிக்கின்றது

பொய் என்பது அத்தனை ரசிக்கக் கூடியதா? பொய் சொல்லாமல் காதலிக்க முடியாதா? கவிதைக்குப் பொய் அழகு... சரி, காதலுக்கும் அதுதான் அழகா? & இப்படி ஏகப்பட்ட சந்தேகங்கள், எல்லா காதலர்களின் இதயத்தில் குடிகொண்டிருக்கின்றது.
நம் எல்லோருக்குமே உண்மையைவிட பொய்யின்மீது அதிக ஈர்ப்பு இருக்கத் தான் செய்கிறது. காரணம், உண்மை என்பது எந்த மாற்றமும் இல்லாமல், இருந்தபடியே இருந்துகொண்டு நம்மை ஜீரணிக்கச் சொல்கிறது. ஆனால், பொய் நமக்காகவே உருவாக்கப்படுகிறது. நாமாகவே உருவாக்கிக்கொள்ளலாம். காதலில் ஆண்களே அதிகமாக பொய் சொல்கின்றனர் என்கிறது ஆய்வுகள்.

நமக்குப் பிடித்த மாதிரியான திருப்பங்களை எல்லாம் கொண்டிருக்கிற ஒரு நாவலைப் போல, பொய் நமக்குப் பிடித்தமான எல்லா அம்சங்களோடும் ஜோடிக்கப்படுகிறது. அதனால்தான் அதை ரசிக்க முடிகிறது. சினிமாவில் வரும் டூயட் பாடல்கள்கூட ஒருவகையில் பொய்தான். நிஜ வாழ்க்கையில் அப்படி எந்த காதல் ஜோடியும் பாடி ஆடுவதில்லை. அதுதான் நிஜம். ஆனால், அந்த நிஜத்தைவிட டூயட் எனும் பொய் ரசிக்கும்படியாக இருக்கிறது, அல்லவா? அப்படித்தான், பொய் சொல்லும் ஆண்களையும் பெண்கள் ரசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். 

பொய்களில் பல வகை உண்டு. 

எல்லோருக்கும் நன்மை ஏற்படுத்தும் பொய்.
எல்லோரையும் பாதிக்கும் பொய்.
யாரையும் பாதிக்காத, நன்மையும் ஏற்படுத்தாத விளையாட்டுப் பொய்.
நமக்கு மட்டும் நன்மையையும், மற்றவர்களுக் கெல்லாம் பாதிப்பையும் ஏற்படுத்துகிற பொய்! 

இப்படி, அதன் பட்டியல் நீளும். சின்னதொரு பொய்கூட சொல்லாமல் ஒரு மனிதன் தன் வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பது மிகமிகக் கடினம். ஆனால், அது எப்படிப்பட்ட பொய் என்பதுதான் கவனிக்கவேண்டியது. வள்ளுவர்கூட, 

‘பொய்மையும் வாய்மையிடத்தே புரைதீர்த்த
நன்மை பயக்கும் எனில்’
 
என்று சொல்லியிருக்கிறார். ஆம், பொய்களாக இருந்தாலும், நன்மையை தந்தால், அவை உண்மைக்கு சமமானதே. உண்மையாக இருந்தாலும், அடுத்தவரை துன்பப்படுத்தினால் அவை பொய்க்கு நிகரானதே. 

காதலின் கெட்ட குணம் பொய் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒருவனை பிடித்துப் போகும் வரைதான், அவன் செய்யும் நல்லது கெட்டது பற்றிய ஆராய்ச்சியெல்லாம். அதன் பிறகு மனம் ஏதாவது ஒரு குருட்டுக் காரணம் சொல்லி அவன் செய்கையையெல்லாம் நியாயப்படுத்திக் கொண்டிருக்கும்.

காதலுக்குள்ளும் இல்லறத்துக்குள்ளும் பொய் உலவுவது என்றைக்கிருந்தாலும் ஆபத்துதான். ‘சின்னப் பொய் தானே’ என்ற சமாதானம் அர்த்தமற்றது. அடுத்தவரை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு சொல்லப்படும் எல்லா பொய்யுமே பெரிய பொய்தான். எனவே காதலர்களே, தம்பதிகளே ஒருவருக்கொருவர் உண்மையைப் பேசி காதலியுங்கள். உங்கள் வாழ்க்கை இனிமையானதாக அமையும்.

அடுத்து, சில ஆண்கள் பெண்களிடம் மிகவும் தாழ்வான எண்ணத்தை கொண்டிருப்பார்கள். 

எப்படிப்பட்ட பொண்ணாக இருந்தாலும் சரி  நாலு வரி புகழ்ந்து பேசினா போதும். நம்பளையே சுத்தி சுத்தி வருவாங்க’ என்று நினைப்பினைக் கொண்ட ஆண்களும் இப்பூவுலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். தப்பில்லை அப்படி ஆண்கள் நினைப்பதற்கு காரணமாக சில பெண்களும் நடப்பதனாலேயே ஆண்களிடம் இவ்வாறான எண்ணங்கள் நிலைகொண்டிருக்கின்றன.

 ‘நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க’
‘இந்த ட்ரஸ் உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு’
‘உங்க குரல் இருக்கே.. ஸ்வீட்டோ ஸ்வீட்!’ 
உங்கள் கூந்தல் ரொம்ப அழகாக இருக்குது

 பெண்களை ‘காதல் கடலில் வீழ்த்த’ இப்படி ஏகப்பட்ட வாசகங்களை சில ஆண்கள் பயன்படுத்துகின்றனர். பெண்களும் புகழ்ச்சியின் உச்சத்தால் கண்மூடித்தனமாக காதல் கடலில் மூழ்கின்றனர். பெண்கள் ‘எல்லோருமே’ வர்ணனைக்கு மயங்குகிறவர்கள் என்று ஒரு சிலர் இப்படி மெத்தனமாகப் பேசிக் கொண்டு திரிவதற்குக் காரணம் இருக்கிறது. தங்கள் அறியாமையாலும் எதையும் எளிதாக நம்பிவிடும் வெகுளித்தனத்தாலும் இன்றுவரை இப்படிப்பட்ட ஆண்களின் வலையில் சிக்கிக் கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
ஆனால், எவனோ ஒருவன், தேவையில்லாமல் நம்மிடம் வர்ணனைகளை வார்க்கிறான்.. பொய் பொய்யாகப் பொழிகிறான் என்றால், ‘அவன் நோக்கம் என்னவாக இருக்கும்..’ என்பதை பெண்கள் சிந்திக்க வேண்டும். இனிமேலாவது சிந்திப்பார்களா பெண்கள் என்பது கேள்விக்குறியே. ஏனெனில் காதலை எடுத்துக்கொண்டால்,  பெண்மனம் இலகுவில் ஏமாறும் மனம். ஆணின் மனம் குரங்குமனம்(எப்போ இன்னொரு கிளை தாவும் என்பது ஐயமே)


உங்களை கல்யாணம் செய்ய விரும்புகிறவன் என்றால், அவன்  உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கூசும் அளவுக்கா வர்ணிப்பான்? சிந்தியுங்கள் பெண்களே..!

அதற்காக, உங்களைச் சுற்றி இருக்கும் அப்படிப்பட்ட வர்ணனை பார்ட்டிகளை ஒவ்வொரு முறையும் கன்னத்தில் அடித்து அவமானப்படுத்தத் தேவையில்லை. பொய் என்று தெரிந்தாலும் நம்மைப் பற்றி உயர்வாக ஒருவர் பேசும்போது, ஒருவித உற்சாகம் மனதில் பிறக்கத்தான் செய்யும். ஒரு சின்னப் புன்னகை, ஒரு ‘தங்க்யூ’ போன்றவற்றால் அவர்களை சமாளித்து, கடந்தும் விடலாம்.  

அதை விட்டுவிட்டு, போயும்போயும் ஒரு வெற்றுப் புகழ்ச்சிக்காக வாழ்க்கையையே ஒருவனிடம் ஒப்படைக்கும் அளவுக்குப் போவதில், எந்தவித அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. என்ன செய்ய.. ஒருசிலர் காதலில் ஆண்களின் வர்ணனைக்கு ஆட்கொண்டு தம் வாழ்க்கையை அழித்த பெண்களும் உள்ளனர். 

ஒரு பெண், ஒரு அந்நிய ஆணிடம், ‘நீ மன்மதன் மாதிரி இருக்கிற.. உன்னுடைய கண் ரொம்ப அழகு.., மீசை வீரமானவன் என்று சொல்லுது, தோள்கள் அழகாக இருக்குது ’ என்றெல்லாம் வர்ணித்து, அவனை மகிழ்ச்சிப்படுத்துவது இல்லை! ‘தனக்கானவனிடம் மட்டுமே அப்படி நடந்து கொள்ளவேண்டும்’ என்று தனக்குள்ளாகவே ஒரு ஒழுக்கத்தை வகுத்துக் கொண்டு காதலிக்கிறாள், வாழ்கிறாள். ஆனால் அந்த ஒழுக்கம் ஆணிடமும் இருக்க வேண்டாமா? அந்நியப் பெண்களை வர்ணிக்கும் ஆண்களையெல்லாம் அந்த ஒழுக்கத்தை மீறியவர்களாகக் கருதிக் கொள்வதில் ஒன்றும் தவறில்லையே. 

காதலில் ஆண்கள் உன்னையே காதலிக்கிறேன் உன்னையே திருமணம் செய்துகொள்வேன்  என நம்பவைத்து எல்லைமீறிவிட்டு ஆளே காணாமல் போயிடுவார்கள்.

பெண்களே..!உங்களை நோக்கி வீசப்படுவது தூண்டிலா, தூய அன்பா என்பதைத் துப்பறிந்து தப்பித்துக் கொள்வது தான் இந்த வயதில் உங்கள் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் சவால்! 

 பெண்களைப் பொறுத்தவரை பயந்தாங்கொள்ளி பட்டாம்பூச்சியாக சிறகடித்து பறக்காதீர்கள். உணர்ச்சிகளை தற்காத்து கொள்வதிலும், போராடுவதிலும், பெண் என்பவள் தேனீயாகவே வாழவேண்டும்.



இதோ காதலித்துக்கொண்டிருப்பவர்களுக்காக ஒரு சின்ன கதை.

காதலியைப் பிரிந்து போர்க்களத்தில் இருந்த ஒரு ராணுவ வீரனுக்கு அவன் காதலியிடமிருந்து ஒரு கடிதம். ‘நீ சென்ற பிறகு எனக்கு ஒரு BoyFriend கிடைத்தான். அவனைத்தான் நான் மணக்கப் போகிறேன். அதனால், உன்னிடம் உள்ள என் புகைப்படத்தை திருப்பி அனுப்பிவிடு’ என்று அதில் எழுதியிருந்தது. 

அவளுக்கு பதிலடி கொடுக்க நினைத்த அவன், சக வீரர்களின் காதலி, தோழிகள் என்று பல பெண்களின் புகைப்படங்களையும் சேகரித்து, அவற்றோடு அந்தக் காதலியின் புகைப்படத்தையும் சேர்த்து அனுப்பினான். கூடவே, ஒரு கடிதம்... உங்கள் கடிதம் கிடைத்தது. எவ்வளவு யோசித்தும் உங்கள் முகம் எனக்கு ஞாபகம் வரவேயில்லை. அதனால் நான் இதுவரை சந்தித்த எல்லா பெண்களின் புகைப்படத்தையும் அனுப்பி உள்ளேன். உங்கள் படத்தை எடுத்துக் கொண்டு, மற்றதை திருப்பி அனுப்பி விடவும்!’’ 

நம்மைப் புறக்கணிப்பவர்களுக்கு சரியான தண்டனை நாம் அவர்களைப் புறக்கணிப்பதுதான். அவன் நல்லவனோ... கெட்டவனோ, கெட்டவன் என்று நினைத்துக் கொள்வதுதான் நமக்கு நல்லது. 

‘கிட்டாதாயின் வெட்டென மற’. அவ்வளவுதான்! 

‘‘காதலுக்கு கண்ணில்லை என்பது உண்மையோ இல்லையோ மூளையில்லை என்பது உண்மை’’ BY.ஆதித்தன்.

No comments:

Post a Comment