Tuesday, 27 December 2011

Love Diwaili

புத்தாடை, பட்டாசு, இனிப்புகளில்
வராத என் தீபாவளி,
“தீபாவளி வாழ்த்துகள்” எனும்
இருசொல் குறுஞ்செய்தியில்
ஓடி வருகிறது
உன்னிடமிருந்து
வெடிச்சத்தங்களை விட்டு
பூமலர்தலைக் கொண்டாட
கற்றுக்கொடுத்தவள் நீ!
தீபாவளி விடுமுறைக்கு
நீ வருவாயயென
ஆவலோடு காத்திருக்கிறோம்
நானும் தீபாவளியும்.
வெடிகளைக் கொளுத்தி
கையால் வீசிக்கொண்டிருந்தவள்,
நான் நெருங்கியதும்
பட்டாசுக்கு பயந்தவளைப் போல
என் பின்னே ஒளிகிறாய்.
உன் பயத்தை
நான் ரசிப்பேனென நினைத்து…
அட… நான் ரசிப்பது உன் நடிப்பை!
நீ
திரி கிள்ளிய சந்தோஷத்தில்
செத்தேப் போகிறது
பட்டாசு.
தீபாவளிக்கு முன்னிரவு
வீதியையும் மனதையும் நிறைத்தபடி
வாசலில் வரைந்துவைத்தாய்,
வண்ணப் பொடிகளால் ஓர் ஓவியம்.
தீபாவளிக்கு பின்காலை.
கலைந்து போன வண்ணங்களை
பாவமாய் நீ பெருக்குகையில், நீட்டுகிறேன்…
இரவோடிரவாக என் கேமராவுக்குள்
படமாகிப் போன ஓவியத்தை.
உன் முகத்தில் தீப ஒளி,
என் கண்ணில் கேமரா!
பட்டாசு சத்தங்களைக் காட்டிலும்
இனிப்புகளோடு என்னில் நுழையும்
உன் கொலுசொலி இசைத்துச் செல்கிறது
எனக்கான தீபாவளியை.

No comments:

Post a Comment