Saturday, 4 August 2012

இறுதி போட்டியிலும் இந்தியா வெற்றி

இறுதி போட்டியிலும் இந்தியா வெற்றி



பல்லெகெலே: இலங்கை உடனான ஐந்தாவது மற்றும் இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் 20 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் சர்வதேச தர வரிசையில் இந்தியா 2ம் இடம் பிடித்துள்ளது.இந்தியா , இலங்கை அணிகளிடையே மொத்தம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நடந்தது. நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 3,1 என முன்னிலை பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது. இந்த நிலையில், சம்பிரதாயமான கடைசி போட்டி பல்லெகெலே சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. சேவக்குக்கு ஓய்வளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரஹானே தொடக்க வீரராக களமிறங்கினார். அவர் 9 ரன் மட்டுமே எடுத்து பெரேரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கோஹ்லி 23, ரோகித் ஷர்மா 4 ரன்னில் வெளியேறினர்.


கம்பீர் , திவாரி ஜோடி பொறுப்புடன் விளையாடி 4வது விக்கெட்டுக்கு 110 ரன் சேர்த்தது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். கம்பீர் ஒருநாள் போட்டிகளில் 5000 ரன் சாதனை மைல் கல்லை கடந்தார்.  திவாரி 65 ரன் (68 பந்து, 6 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா டக் அவுட்டாகி ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். கம்பீர் 88 ரன்னில் (99 பந்து, 7 பவுண்டரி) ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். கேப்டன் டோனி , பதான் ஜோடி 7வது விக்கெட்டுக்கு 77 ரன் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய டோனி 58 ரன் எடுத்து (38 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட் ஆனார்.

இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன் குவித்தது. இர்பான் பதான் 29, அஷ்வின் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை பந்துவீச்சில் மலிங்கா 3, பிரதீப் 2, பெரேரா, சேனநாயகே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 295 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணி 15.1 ஓவரில் 102 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. தில்ஷன் 0, தரங்கா 31, சண்டிமால் 8, மேத்யூஸ் 13, கபுகேதரா 9 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய திரிமன்னே அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார். எனினும், இலங்கை அணி 45.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன் எடுத்து தோல்வி அடைந்தது. பதான் 5 விக்கெட் வீழ்த்தினார்.

No comments:

Post a Comment